வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்ற பவனி நாகப்பட்டினம்:வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், அற்புதங்களின் உறைவிடமாக, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இத்தலம், கீழ்திசை நாடுகளின் “புனித லூர்து ஆலயம்” எனவும் போற்றப்படுகிறது. இந்த பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் வெகு விமரிசையாக இன்று (ஆக.29) நடைபெற்றது.
முன்னதாக, புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஊர்வலமும், அதற்கு முன்பாக தேர் பவனியும் நடைபெற்றது. உற்சாகமான முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே பேராலய வளாகத்தை வந்தடைந்தது.
பின்னர், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், திருக்கொடியை புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை நடத்தி, கொடியைப் புனிதம் செய்வித்தார்.
பேராலய அதிபர் சி.இருதயராஜ், பங்குத் தந்தை எஸ்.அற்புதராஜ் ஆகியோர் உடனிருந்து வழிபாடுகளை நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து, மாலை 6.40 மணிக்கு 'வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா' திருக்கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'மரியே வாழ்க..' என முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், கொடியேற்றத்தின்போது கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பேராலயம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுமையும் வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், நாகை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், உதவி பங்குத் தந்தையர் டேவிட் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேளாங்கண்ணி முழுவதும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உட்பட 11 மாவட்டங்களில் இருந்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகள் பரிசோதனை செய்த பிறகே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விழாவிற்காக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 60 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நான்கு ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், வேளாங்கண்ணி கடற்கரையில் இன்று ஆக.29 முதல் செ.8 வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Velankanni Church: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்.. செப்.8 வரை கடலில் குளிக்க தடை!