நாகப்பட்டினம்: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு நள்ளிரவுடன் முடிவடைந்து, 2024ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்கள் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் துவங்கினர்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பேராலய வளாகத்தில் உள்ள புனித சேவியர் திடலில் சிறப்பு திருப்பலி நேற்றிரவு நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சாவூர் மறைமாவட்ட பரி பாலகர் எல்.சகாயராஜ் சிறப்புத் திருப்பலிகளை நிறைவேற்றி வைத்தார். தொடர்ந்து நள்ளிரவு 12.01 மணிக்கு 2024ஆம் ஆண்டு பிறப்பு அறிவிக்கப்பட்டது.