துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களிலும் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு செய்தார்.
மயிலாடுதுறையில் காவிரியின் வடகரையில் உத்தரமாயூரம் என்றழைக்கப்படும் கைகாட்டும் வள்ளலாக ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக பழமையும் புகழும் வாய்ந்த ஶ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய ஸ்தலமாக கருதப்படுகிறது.
வேறெங்கும் இல்லாதவாறு இங்கு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக முதலமைசர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோவில் உள்ளது.
கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுறவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாக கூறப்படுகிறது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற ஸ்தலமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகளின் சீரிய முயற்சியால் ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன. 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 3 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரு கோயில்களிலும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதலமைச்சர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் இரண்டு கோயில்களிலும் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிங்க:புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு: முதலமைச்சர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு வாதம்!