மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் லெட்சுமணன், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடித்து வந்தார். பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்கக் கூடாது என்று கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆனால், லெட்சுமணன் குடும்பத்தினர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்த காரணத்தால், ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும்; ஊரில் உள்ளவர்கள் இவர்கள் குடும்பத்துடன் பேசினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டும் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பலமுறை லெட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பல ஆண்டுகளாக வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருவதாகவும் லெட்சுமணன் தெரிவிக்கின்றார்.