நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்தக் காயத்துடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.