மயிலாடுதுறை:சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவிற்காக சமையலர் கலா என்பவர் உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டார்.
அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார். அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அருகில் இருந்த பள்ளியின் சமையல் கூடத்தில் இருந்து இப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.
ஆனால் இப்பள்ளிக்கான சமையலரை கூடம் பழைய கட்டிடத்திலேயே செயல்படுகிறது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.