சீர்காழியில் மூவர் விழா: 2-வது நாளில் இசை, நாட்டியத்தின் மூலம் மூவரை ஆராதித்த கலைஞர்கள்! - Nagai Sirkazhi
நாகை: சீர்காழியில் நடைபெற்று வரும் தமிழிசை மூவர் விழாவின் இரண்டாவது நாளான நேற்று காலை அரசு இசைப்பள்ளி மாணவர்கள் மங்கல இசை, பாட்டுப் பாடி தமிழசை வளர்த்த மூவரை ஆராதித்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களாக முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகியோர் தமிழ் கீர்த்தனைகளைப்பாடி தமிழிசையை வளர்த்தனர்.
அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் சீர்காழியில் மண்டபம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழிசை மூவர்களின் பெருமையை போற்றும் வகையில், இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு அரசு சார்பில் மூன்று நாட்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான கலை, பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட கலை மன்றம் ஆகியவற்றின் சார்பில் மூவர் விழா பிப்.27-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதன் இரண்டாவது நாளான நேற்று (பிப்.28) காலையிலிருந்து மாலை வரை சீர்காழி, கடலுார், விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த அரசு இசைப்பள்ளி மாணவர்கள் மங்கல இசை மற்றும் பாட்டுகளைப் பாடினர். அதனைத்தொடர்ந்து இரவு யுவகலாபாரதி, சுசித்ரா உள்ளிட்ட திரளான கலைஞர்கள் பங்கேற்று மங்கல இசை மற்றும் பாட்டுப் பாடி தமிழிசை வளர்த்த மூவரை ஆராதித்தனர். இந்நிகழ்ச்சியில், இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுப் பார்த்து ரசித்தனர்.