மயிலாடுதுறை அருகே சித்தர்காடு மெயின் ரோட்டில் முழு நேரமும் இயங்கும் தனியார் உணவகம் உள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் மதுபோதையில் வந்த மூன்று பேர் இந்த உணவகத்தில் சாப்பிட்டனர். அப்போது தங்களை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி உணவக ஊழியரை தண்ணீர் சொம்பால் தாக்கினர்.
உடனடியாக கடை உரிமையாளர் வேலாயுதம் மற்றும் கடை ஊழியர்கள், அந்த மதுபோதை ஆசாமிகளை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும், மீண்டும் அரிவாளுடன் வந்த இருவர், உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், கடை உரிமையாளர் வேலாயுதம் மற்றும் ஊழியர்கள் கார்த்திக், சிவா ஆகியரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்த கடை உரிமையாளர் வேலாயுதமும் கடை ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த ஜஸ்வந்த் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
சித்தர்காடு பகுதியில் போதை ஆசாமிகள் அடிக்கடி இதுபோல ரகளையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதி வணிகர்கள், இது குறித்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதையும் படிங்க:நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு