மயிலாடுதுறை:தமிழ்நாட்டில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்து ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்துவதற்காக சிவசேனா கட்சி, தேசிய ஜனநாயக மக்கள் கட்சியுடன் இணைந்து வருகின்ற 27ஆம் தேதி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை ஸ்ரீஅம்மன் திரிசூல யாத்திரை நடத்த உள்ளது.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதினத்திடம், கட்சிகளின் தலைவர்கள் அருளாசி பெற்றனர். சிவசேனா மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமையில் தேசிய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் கதிர்வேல் பொதுச்செயலாளர் சிவகுரு, பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் திரிசூல யாத்திரை அழைப்பிதழை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளிடம் வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மாநில செயலாளர் சுந்தரவடிவேல், " மகாராஷ்டிரா முதலமைதச்சர் உத்தவ் தாக்கரேவின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் இந்துத்துவ புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வருகின்ற 27ஆம் தேதி முதல் கன்னியாகுமாரியிலிருந்து சென்னை வரை ஸ்ரீஅம்மன் திரிசூல ரதயாத்திரை பயணம் நடத்த உள்ளோம்.
திரிசூல யாத்திரை நடத்தும் சிவசேனா இந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆதினத்தின் கருத்துக்களை கேட்டறியவும், யாத்திரைக்கான ஆசி பெறவும் தருமபுரம் ஆதீனம் வந்தோம். எங்களுடைய தேர்தல் அறிவிப்புகளில் ஒன்றான சைவ சித்தாந்த பல்கலைக்கழகமும், சைவ திருமுறை ஆராய்ச்சி மையமும் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பினை தருமபுர ஆதினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் இந்து எழுச்சியை உருவாக்குவதே சிவசேனா கூட்டணி கட்சியின் முக்கிய நோக்கம். தமிழ்நாட்டில் எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது" என்றார்.