மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாலும் 12,000 இணைப்புகள் உள்ள திட்டத்தில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை கழிவுநீர் வாய்க்கால்கள், ஆறுகள், வீதிகளில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் தொற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாதாள சாக்கடை ஆள் நுழைவுத் தொட்டி மூடிகள் பல்வேறு இடங்களில் உடைந்துள்ளதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
நேற்று (ஜூன்29) மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தரங்கம்பாடி சாலை வழியாக வடகரைக்கு சென்ற 4பி என்ற அரசு பேருந்து மயிலாடுதுறை கொத்ததெரு என்ற இடத்தில் சாலையில் முன்னே சென்ற டிராக்டரை முந்த முயற்சித்தபோது பாதாள சாக்கடை தொட்டி மூடி திறந்திருந்ததால் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது.