இந்தியாவில் வாணிபம் செய்ய டென்மார்க் நாட்டினர் கப்பல் மூலம் இலங்கை வழியாக 1620-ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர். தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, புது எருசலேம் ஆலயம் உள்ளிட்டவைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
டேனிஷ்காரர்கள் இறந்தால் கடற்கரை அருகே கல்லறை தோட்டம் அமைத்து அங்கு அடக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். டென்மார்க் நாட்டினர் அங்குள்ள மாணவர்கள் இந்திய கலாசாரத்தை தெரிந்துகொள்ளவும், முன்னோர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும் ஆண்டுதோறும் தரங்கம்பாடிக்கு வருகை தருகின்றனர். டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்ததன் 400-வது ஆண்டு விழா செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்திய கலாசாரத்தை அறிந்துக் கொள்ளும் நோக்கில் டென்மார்க் நாட்டில் உள்ள 'வெஸ்ட்பின்ஸ் எப்டர் ஸ்கூல்' என்னும் பள்ளியில் படிக்கும் 14 முதல் 18 வயது வரை உள்ள 35 மாணவர்களும், எட்டு ஆசிரியர்களும், பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி கிளிட் தலைமையில் ஒரு வார பயணமாக தரங்கம்பாடிக்கு வந்துள்ளனர்.