மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பங்கேற்ற 12ஆம் வகுப்பு மாணவன் ரிஷிபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், உரிய நேரத்தில் மாணவனுக்கு முதலுதவி அளிக்காமலும், போட்டியை தாமதமாக துவங்கியதாகவும், காலம் தாழ்த்தி மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டி மாணவனின் உறவினர்கள், பாஜக, பாமக என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன் - நித்தியா தம்பதியின் மகன் ரிஷிபாலன்(17). இவர் செம்பனார்கோவிலில் இயங்கிவரும் தாமரை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இம்மாணவன் காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்.
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ரிஷிபாலன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் ரிஷிபாலனை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த மாணவனின் தாயார் நித்தியா மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷிபாலன் உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், மாணவன் ரிஷிபாலன் மதியம் மூன்று மணிக்கு மயங்கி விழுந்ததாகவும்; ஆனால், மாணவனை மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மேலும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு, மாணவன் மயங்கிய தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும் மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் நித்தியா புகார் அளித்துள்ளார்.
வேறு யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது: பெற்றோர் கண்ணீர்:மேலும், தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி தமிழ்நாட்டில் ஒருவருக்கும் ஏற்படக்கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்தியா நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொறையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடல், உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.