மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக்கிய வரலாறு நிகழ்ந்த தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று (மே 30) மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வந்துள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.