தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக" - மருத்துவப்படி உயர்வு

ஓய்வூதியர்களுக்கு 30 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கூடுதல் ஓய்வூதியத்தொகையை 70 வயதில் இருந்தே வழங்க வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

union
ஓய்வூதியர்கள்

By

Published : Mar 26, 2023, 1:23 PM IST

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று(மார்ச்.25) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முத்தையா, துணைத் தலைவர் பழனியாண்டி, மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் மணிவண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், 'மத்திய அரசு வழங்கி வருவது போல் தற்போதுள்ள மருத்துவப்படியான 300 ரூபாயை, ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி குறித்த விவரம் மட்டுமே கொடு ஆணை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்களுக்கு தற்போது பெரும் தொகை விவரம் தெரியவில்லை, ஆதலால் ஆண்டிற்கு ஒரு முறையாவது அவர்கள் பெரும் ஓய்வூதியத்தை தெரிந்து கொள்ள உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் - மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஓய்வூதியமான 9 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்' உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தலைவர் மணிவண்ணன், "ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி உள்ளாட்சி தணிக்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசால் அமல்படுத்தப்படும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது முதன்மையான கோரிக்கை. இரண்டாவதாக குடும்ப பாதுகாப்புத் திட்டத்தில் 80 ரூபாய் பிரீமியம் தொகை பிடித்துக் கொண்டிருந்த எங்களிடம் இப்போது 150 ரூபாய் வாங்குகிறார்கள். அதேநேரம் எங்களுக்கு குடும்ப பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட தொகை ஐம்பதாயிரம் ரூபாய் அப்படியே தொடர்கிறது. எனவே 150 ரூபாய் பிரீமியம் தொகை வாங்கும்போது, அத்திட்டத்திற்கான தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கடுத்தாற்போல தமிழ்நாடு அரசு 1.1.2021, 1.1.2022, 1.7.2022 ஆக மூன்று கட்டமாக அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற எங்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படியில் முதல் முறை 18 மாதங்களும், இரண்டாவது முறை 6 மாதங்களும், மூன்றாவது முறை 6 மாதங்களும் நிலுவைத் தொகை கொடுக்கப்படவில்லை. அதைப்பற்றி பேசாமலேயே விட்டுவிட்டார்கள் என்பதை மிகவும் வருத்தத்தோடு இங்கு பதிவு செய்கிறோம். அதேபோல், தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் 80 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத் தொகை 70 வயதில் இருந்தே வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறுகிற குறைதீர் நாள் கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கொடுக்கப்படும் குறைகளுக்கு உரிய பதில் கொடுக்காதது கண்டனத்திற்கு உரியது" என்று கூறினார்.

இதையும் படிங்க: டிப்ரஷன்னில் 2K கிட் செய்த வேலை.. கடுப்பான போலீஸ்.. பெண் தோழியின் பிக்கப்-டிராப் சமாச்சாரம்..

ABOUT THE AUTHOR

...view details