நாகையில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதும், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில், இரு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலை தொடர்ந்து, வன அலுவலர் கலாநிதி தலைமையிலான அலுவலர்கள், அக்கரைபேட்டை, திடீர் குப்பம் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்கரைப்பேட்டை பகுதியில் செண்பகம் என்பவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து திடீர் குப்பம், நாகை துறைமுகம் பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறை காவலர்கள், முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையிலான கடல் அட்டைகளையும், அட்டைகள் பதப்படுத்த பயன்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.