மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அர்ஜுனன். இவர் கடந்த 19 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூரை சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்பொழுது செந்தில், தான் ஒரு மிகப் பெரிய ரவுடி என்றும் தன்னை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் எச்சரித்து, ஆபாசமாகப் பேசி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்க்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரவுடி செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவுடி செந்திலை தேடிவந்தனர்.