தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கம்பத்தை அகற்றாமல் தார் சாலை போட்ட நெடுஞ்சாலைத் துறை! அதிகாரிகள் அலட்சியமா? - நெடுஞ்சாலை துறை

electric pole in the middle of the road: மயிலாடுதுறை அருகே சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்ட நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்: மீண்டும் மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை!
தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்: மீண்டும் மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:28 PM IST

தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்

மயிலாடுதுறை:கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில், சாலையின் ஓரத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது அதனை சற்றும் பொருட்படுத்தாமல் புதிய சாலைகளை அமைத்த அவலம் நடைபெற்றது. அதுபோல அடி பம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போடுவது போன்ற சம்பவங்களும் நடந்தன.

இதனை பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து நகைப்புக்குள்ளாக்கினர். இந்நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் நடந்துள்ளது. திருமணஞ்சேரி உத்வாக நாதர் ஆலயம் உலக புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமாக உள்ளது.

திருமணம் கைகூடும் தலமான இது பார்க்கப்படுவதால் ஏராளமான பக்தர்கள் திருமணம் கைகூடாததற்கான பரிகாரங்களை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோயிலுக்கு வெளியூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அஞ்சாறு வார்த்தலை கிராமத்தில் இருந்து திருமணஞ்சேரி வழியாக திருமங்கலம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், கப்பி கற்கள் பெயர்ந்தும் காணப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறையினர், மூன்று மீட்டர் அகலத்தில் இருந்த தார்ச்சாலையை ஐந்தரை மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்து புதிய சாலை அமைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "உங்களுக்கு வந்தால் தக்காளி.. எங்களுக்கு வந்தால் ரத்தமா?" - அமைச்சர் கே.என்.நேரு!

இந்த நிலையில் அஞ்சாறு வார்த்தலை பகுதி அருகே சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமலேயே நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைத்திருப்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழியே திருமணஞ்சேரி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வாகனத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வீடியோவுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இதுகுறித்து குத்தாலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், நெடுஞ்சாலை துறை மற்றும் மின்வாரியத்துறையிடம் தெரிவித்து உடனடியாக மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இதற்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு அதற்கான தொகையினை நெடுஞ்சாலை துறையினர் செலுத்திய பின்னர் அந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.556 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

ABOUT THE AUTHOR

...view details