நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காக்களில் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மே மாதத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கீழையூர், மேலையூர், கருவாழக்கரை, மேலப்பாதி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு (ஜூலை 27) பலத்த காற்றுடன் பெய்த மழையில், அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்து வயல்களில் தேங்கிய மழை நீரில் மூழ்கியுள்ளன.
பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மேலையூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வடிய வழியில்லை என்று குற்றஞ்சாட்டும் விவசாயிகள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் எஞ்சினை வாடகைக்கு வாங்கி வந்து வயலில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், முற்றிய தருவாயில் உள்ள பசுமையான பயிர்கள் பதராக மாறிவிடும் என்று கவலை அடைந்துள்ளனர். உடனடியாக மேலையூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி உதவிட வேண்டும் என்று பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.