மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய துணை ராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெத்தபெருமாள். பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டில் முடங்காமல், காவலர் தொண்டர்கள் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி ராணுவம், காவல் துறையில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.
தொடக்கத்தில் இவரிடம் 20 இளைஞர்களே பயிற்சிக்கு இணைந்தனர். தற்போது 80 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் மெதுவான ஓட்டம் (ஜாகிங்), வேகமான ஓட்டம் (ரன்னிங்), உயரம் தாண்டுதல், தூரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் (ஆண்களுக்கு மட்டும்) உள்ளிட்ட பயிற்சிகளை இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கிறார். பின்னர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் இவரிடத்தில் பயிற்சி பெறும் தன்னார்வ இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.