காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இரண்டாம், மூன்றாம் சுற்று ஏலம் உரிமம் கொடுக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
'ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்க..!' - ஜெயராமன் - assembly
நாகை: "ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், "ஏற்கெனவே, 5094 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அரசு ஆய்வு அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இரண்டாம், மூன்றாம் ஆம் சுற்று ஏலம் உரிமம் கொடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில், இரண்டாம் சுற்றில் திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 474 சதுர கி.மீ பரப்பளவில் இந்திய ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தாலும், மூன்றாம் சுற்றில் ராமநாதபுரம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் 1863 சதுர கி.மீ பரப்பளவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தாலும் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. இதனை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். காவிடப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.