மயிலாடுதுறை:மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீரானது காவிரி ஆற்றின் கடைசி கதவணையான சீர்காழி அடுத்த மேலையூர் கதவணையில் தேக்கி வைக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்காகத் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் அனைத்து கிளை வாய்க்கால்களின் வழியாக தற்போது காவிரியில் தொடர்ந்து அதிகமான நீர் வரத்து வந்தவண்ணம் உள்ளது.
இதனால், காவிரியில் வரும் உபரிநீர் முழுவதும் மேலையூர் கடைமடை நீர்த்தேக்கத்திலிருந்து கடலுக்கு திறக்கப்பட்டு கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் தர்மகுளம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும்பணி நடைபெற்று வருவதால், அதன் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் இருகிராம மக்கள் அவ்வழியாகச் சென்று வந்தனர். இதற்கிடையே இன்று (ஜூலை 27) காலை முதல் காவிரி ஆறு முழுவதும் உபரி நீர் திறக்கப்பட்டதால் 'தற்காலிக தரைப்பாலம்' மூழ்கியது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து சென்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏராம்பாளையம், வானகிரி கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் அத்தியாவசியத்தேவைகளுக்கும் மாணவ-மாணவிகள் கல்வி கற்பதற்கும் இந்த காவிரி ஆற்றைக் கடந்து மறுபக்கம் செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தற்போது தண்ணீர் முழுமையாக செல்வதால் வேறு வழியின்றி, தண்ணீரில் இறங்கி ஆற்றை அச்சத்துடன் கடந்து சென்றும் வருகின்றனர். இதே நிலை நீடித்தால், எஞ்சியுள்ள தரைப்பாலமும் முழுவதுமாக கரைந்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக காவிரி ஆற்றில் தற்காலிகப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மகுளம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தற்காலிகப் பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!