தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டல் வேலைக்காக மலேசியா சென்ற நபர்.. உரிமையாளரின் கறார் பேச்சால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் - மயிலாடுதுறையில் நடப்பது என்ன? - Malaysia worker

Mayiladuthurai news: மலேசியா நாட்டுக்கு ஓட்டல் வேலைக்குச் சென்ற இளைஞரை கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் எனவும் இளைஞரின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mayiladuthurai news
மலேசியாவில் வேலைக்கு சென்ற இளைஞரை சித்தரவை செய்தாக புகார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 9:47 AM IST

மயிலாடுதுறை: பெரிய நாகங்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு, சுசிலா தம்பதியின் மகன் மாயகிருஷ்ணன் (35). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் மொத்தம் 6 அண்ணன் - தம்பிகள் இருந்த நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனியாகச் சென்றுள்ளனர். தற்போது இவரும், இவரது தம்பி ராம்குமாரும் பெற்றோருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாயகிருஷ்ணனின் கடின உழைப்பைக் கண்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கணேசன், தேவகோட்டையில் உள்ள ராஜா என்பவர், மலேசியாவில் உள்ள தனது ஓட்டலுக்கு வேலைக்கு ஆட்களை விசாவிற்குப் பணம் இல்லாமல் அழைத்துச் செல்கிறார் என்றும், மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் தருகிறார் என்றும் கேள்விப்பட்டும், தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகனிடம் மாயகிருஷ்ணனை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், மாயகிருஷ்ணனிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு, கடந்த பிப்.20ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருமாறு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாயகிருஷ்ணனும், அவரது தம்பியுடன் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது ஏஜெண்ட் பாலமுருகன் அளித்த விசாவில் டூரிஸ்ட் விசா என இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 'ஏன் ஓட்டல் வேலைக்கான விசா கொடுக்காமல் டிராவலிங் விசா கொடுத்துள்ளீர்கள்' என ராம்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு அவர், 'மலேசியாவில் உள்ள எங்கள் ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச் செல்பவர்களை இப்படித்தான் அழைத்துச் செல்வோம், அங்கு சென்ற பின் 2 மாதத்திற்குள் வேலைக்கான விசா வழங்கப்படும்' எனக் கூறி, மாயகிருஷ்ணனை மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

மலேசியா சென்ற மாயகிருஷ்ணன் 2 மாதம் தனது வீட்டில் வாரந்தோறும் பேசியுள்ளார். அப்போது, 'தனக்கு காய்கறி நறுக்குவது, சாப்பாடு பரிமாறுவது என்று ஓய்வில்லாமல் 10 மணி நேரம் வேலை வாங்குவதாகவும், ஓய்வெடுக்க முடியவில்லை எனவும்' அழுது புலம்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் முதல் மாதம் முடிந்ததும், சம்பளம் கேட்டதற்கு அடுத்த மாதம் சேர்த்து உன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக ஓட்டல் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அதனை நம்பி, 2 மாத முடிவில் மாயகிருஷ்ணன் கேட்டதற்கு, உன் வீட்டுக்கு சம்பளம் அனுப்பி வைத்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அவரது குடும்பத்தினர், வங்கியில் சென்று பார்த்தபோது பணம் வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே ஹோட்டல் உரிமையாளர் ராஜாவிற்கும், மாயகிருஷ்ணனுக்கும் சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. பின்னர் திடீரென ஒரு நாள், மாயகிருஷ்ணனின் அறையில் உள்ள நண்பர் ஒருவர், மாயகிருஷ்ணனுக்கு உடல் நிலை சரியில்லை என அவரது தம்பிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியதாகக் கூறப்படுகிறது.

அந்த தகவலின் பேரில், ராம்குமார் தனது அண்ணனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, சம்பளம் கேட்டால் அடிக்கின்றனர் எனவும், வேலையை அதிகப்படுத்தி வருவதாகவும், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட அவரது தாயார், என் மகனை அழைத்து ஊருக்கு வாருங்கள் என புலம்பியுள்ளார். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ராஜாவிடம் கேட்டதற்கு, எந்த பதிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.

திடீரென ஒருநாள், மாயகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், ஓட்டலில் இருந்து அவரை துரத்திவிட்டதாகவும், தற்போது மனநலம் குன்றி அலைந்து திரிவதாகவும், எப்படியாவது அவரை அழைத்துச் செல்லுங்கள் என ராம்குமார் செல்போனுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் வந்ததால், நிலைமை கைமீறி போய்விட்டதை சுதாரித்துக் கொண்ட குடும்பத்தினர், உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஏஜெண்ட் பாலமுருகனை சந்தித்து மாயகிருஷ்ணனனை அனுப்பி வைக்குமாறு கேட்டபோது, ஏஜெண்ட் மலேசியா ஓட்டல் உரிமையாளர் ராஜாவிடம் தொலைபேசி வாயிலாக பேசியதாகக் கூறுகின்றனர். அப்போது ராஜா, அக்டோபர் 30ஆம் தேதிக்குள் மாயகிருஷ்ணன் ஊருக்கு வந்து விடுவான் என்று கூறியுள்ளார். ஆனால், அக்டோபர் 30க்குள் அனுப்பவில்லையே என கேட்டதற்கு, தீபாவளிக்குள் வந்து விடுவார் என்றும் ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி முடிந்தும் ஊருக்கும் வராததால், உரிமையாளரிடம் கேட்டதற்கு பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த நவ.17ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு, அதுவும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மலேசியா ஓட்டல் உரிமையாளர் ராஜா, மாயகிருஷ்ணன் பெற்றோரிடம், "நீங்கள் எங்கே சென்றாலும் என்னை எதுவும் செய்ய முடியாது, அவன் 3 மாதத்திற்கு மேல் வேலை செய்யவில்லை, நான் அழைத்து வந்ததற்கான தொகையை இன்னும் வசூல் செய்யவில்லை, அதற்குள் அவனை அனுப்ப வேண்டும் என்றால், நீங்கள் ரூ.1 லட்சம் பணம் அனுப்பி வையுங்கள். அப்போதுதான் நான் அவனை விமானம் ஏற்றுவேன்" என கறாராகப் பேசி போனை வைத்ததாகக் கூறுகின்றனர்.

தற்போது மாயகிருஷ்ணனின் குடும்பத்தார், தனது மகனை மீட்டுத் தருமாறும், அந்த ஓட்டல் உரிமையாளரால் பாதிக்கப்பட்ட தங்கள் மகனுக்கு மருத்துவச் செலவையும், உரிய நஷ்டயீட்டையும் பெற்றுத் தருமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் 8ஆம் நாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளி வாகனத்தில் பிச்சாண்டவர் சாமி உலா!

ABOUT THE AUTHOR

...view details