நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள திருவெண்காடு காவல் துறையினர் 21 பேரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் சந்தித்துஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவெண்காடு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் பணியாற்றிய காவல் துறையினர் 21 பேர் சித்தர்க்காடு அண்ணா திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் 21 நபர்களுக்கும் கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவலர்கள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியதால் இந்த தொற்று காவலர்களுக்குப் பரவவில்லை. கரோனா தொற்றால் மூடப்பட்ட திருவெண்காடு காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. பிற காவல் நிலையங்களில் உள்ள காவல் துறையினரைக் கொண்டு காவல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது.
பொதுமக்கள் நாளை முதல் புகார்கள் கொடுக்க வரலாம். அவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் எட்டு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறார்கள்” என்றார்.
அப்போது, அவருடன் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காவல் ஆய்வாளர் சிங்காரவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.