மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டதை தொடர்ந்து சந்தேக மரணமாக பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி ஆர்டிஓ தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி உத்திராபதியார் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 36), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நளமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் மதுபாலா (வயது 28) ஆகிய இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் 17 பவுன் நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் செந்தில்குமார் பணம், நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாகப் பெண்வீட்டார் கடந்த வருடம் சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின், மனைவி மதுபாலாவை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறி சமாதானம் பேசி கணவர் செந்தில்குமார் அழைத்துச் சென்றுள்ளார். தற்போது செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையிலும், மதுபாலாவிடம் அவர் மற்றும் அவரது வீட்டில் உள்ளோர் மேலும் ரூ.10 லட்சம் பணம், 10 பவுன் நகை கேட்டுக் கடந்த சில மாதங்களாக மதுபாலாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.