நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், சில மாநிலங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், மத்திய அரசின் மக்களுக்கு அரிசி வழங்குவதற்குப் பதில் பணம் வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் மாநில அரசு அமல்படுத்தியது.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இயங்காத நிலை உருவானது. இதனால் ரேஷன் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த 38 மாதங்களாக அதாவது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வருமானமின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடைகளில் பணிபுரியும் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாற்று வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ( நவ. 05) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ஊழியர்கள் 50க்கும் மேற்பட்ட ரேஷன் ஊழியர்கள் தங்களது ஆதார் அட்டை , குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .