தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த கட்டடத்தில் இருந்து வாடகை கட்டடத்திற்கு மாறிய ரேஷன் கடை: சாலை மறியல் செய்த மக்கள் - மயிலாடுதுறை மாவட்ட மக்கள்

தரங்கம்பாடி அருகே ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டு இயங்கி வந்த நியாய விலைக்கடை, வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்

By

Published : Oct 11, 2021, 5:39 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், விசலூர் ஊராட்சியில் உள்ள பத்தம், விசலூர், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் சொந்த கட்டடத்தில் இயங்கிய ரேஷன் கடை

இங்கு கடந்த 30 ஆண்டுகளாக நியாயவிலைக்கடை சேந்தமங்கலம் கிராமத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், விசலூர் ஊராட்சி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 2019 -2020ஆம் ஆண்டு, ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் விசலூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டது. மேலும் அக்கடை, கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டதில் இருந்து, பொதுமக்களுக்கு அங்கிருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

திமுக ஆட்சியில் வாடகைக்கு மாற்றப்பட்ட ரேஷன் கடை

திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஏற்கெனவே இயங்கிய வாடகை கட்டடத்திற்கு நியாய விலைக்கடை மீண்டும் மாற்றப்பட்டது.

இதனைக் கண்டித்து விசலூர், பத்தம் கிராம பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சங்கரன்பந்தல் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திடீரென சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள்

புதிய கட்டடம் இருக்கும்போது, வாடகை கட்டடத்தில் ஏன் இயங்கவேண்டும்? உடனடியாக மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் விசலூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு, பூட்டி கிடக்கும் கடையைத் திறக்க வேண்டும் என அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கலகம் பிறந்ததால் கிடைத்த நியாயம்

தகவலறிந்து வந்த தரங்கம்பாடி மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ் குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடை புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் மயிலாடுதுறை - பொறையாறு சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பத்து ரூபாய்க்கு பனியன் சட்டை: முண்டியடித்த மக்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details