நாகை அருகேயுள்ள ஓரத்தூர் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை உட்பட நான்கு தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் 10 லட்சம் மக்கள் வசிக்கும் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவந்தனர்.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறையைச் சேர்ந்த திமுக பிரமுகர் குத்தாலம் கல்யாணம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், மருத்துவக் கல்லூரியை வேறு எங்கும் மாற்றக் கூடாது, மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தியும் இன்று நாகை வணிகர்கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர், மீனவர்கள் சார்பாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் வழக்கறிஞர்கள், திமுக அதிமுக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.