மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம் நேற்று முன்தினம் (மார்ச் 31) மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், நேற்று (ஏப். 1) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கட்சியில் சேர்ந்து, என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதாகவும், எங்களது அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வி என்பவர் மூலம் எனக்கு அழைப்புவிடுத்தார்.
ஆனால், நான் அதில் நாட்டம் காட்டவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி. சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிகளுக்குக்கூட சில லட்சங்கள் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. மருத்துவத் துறையில் இடமாறுதல்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டி சூழல் இருந்தது.
படித்துவிட்டு எதிர்காலம் குறித்த அச்சத்துடன் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராததோடு, பணி வழங்க பணம்பெற்று ஊழல் நடந்துள்ளது. 84 விழுக்காடு படிப்பறிவுகொண்ட மாநிலமான தமிழ்நாட்டில், வெளி மாநிலத்தவர்களுக்குப் பணி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு இளைஞர்களுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். நம்முடைய மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்லூரிகள் நம்முடைய சொத்து. எனவே, வெளிமாநிலங்களிலிருந்து வந்து நம்முடைய மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதை நான் நிராகரிக்கின்றேன்.