சென்னை
சென்னை கொருக்குப்பேட்டையிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் வட சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று(12-12-19) பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
மேலும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான சிறிய பெட், கொசு வலை, குழந்தைகள் அணியும் ஆடைகள், சோப்பு, தேங்காய் எண்ணெய், சிறிய குடை ஆகியவை அடங்கிய பரிசுகளை குழந்தை பெற்ற கர்ப்பிணிகளுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் சந்தானம், பகுதி செயலாளர் பாலாஜி, கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆகியோர் பெண்களுக்கு வழங்கினர்.
ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கி கொண்டாட்டம் நாகை
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
ரஜினி மக்கள் மன்றத்தின் நாகை மாவட்டத் தலைவர் இராஜேஸ்வரன் தலைமையில், தரங்கம்பாடி சாலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினர். மேலும் நகரின் முக்கியப் பகுதிகளான ரயிலடி, பேருந்து நிலையம், துலாகட்டம் ஆகியப் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்குப் போர்வை, பாய், உணவு பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்தனர். இதில் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டு ரஜினி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரஜினி ரசிகர்கள் இதே போல், நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் கோயில்களில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என துவா ஓதி அவரது ரசிகர்கள் வேண்டிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏழைகளுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தருமபுரி
தருமபுரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கம்பளி, போர்வை உள்ளிட்டவை வழங்கியதோடு, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று(12-12-19) பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி காப்பு வழங்கப்படும் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட செயலாளர் சண்முகதேவன் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஆலத்தூரை அடுத்த நாட்டார் மங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று ரஜினி பிறந்த நாளை கொண்டாடினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் மற்றும் மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முன்பு ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் ரஜினி ரசிகர்மன்ற தலைவர் தாயுமானவன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். மேலும், ரஜினியின் பிறந்தநாள் பரிசாக பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கினர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் அப்பள்ளிக்கு தேவையான கணினி குடிநீர் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை ஆகிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பாகமாக திருப்பரங்குன்றம் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை தத்தெடுத்து ரூ.1.20 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும், 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினியின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அங்குள்ள காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜையும், கோதானமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி ரசிகர்கள் தங்க மோதிரம் வழங்கினர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதன்படி 25 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள், நாற்காலி, வாக்கிங் ஸ்டிக், தையல் இயந்திரம், சலவை பெட்டிகள், மரக்கன்றுகள், வேட்டி, சேலை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
தருமபுரி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தஞ்சை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு மரக்கன்றுகளை நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.
மேலும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயர் சூட்டி அந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை ரஜினி ரசிகர்கள் அணிவித்து மகிழ்ந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஒரு நாளைக்கு மட்டும் இலவச பஸ் பயணத்துக்காக, தனியார் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். கலவை வரை செல்லக்கூடிய அந்தப் பேருந்து ஒரு நாளைக்கு ஏழு முறை ஆற்காட்டிலிருந்து கலவைக்கு சென்று வருகிறது. விவசாயிகள் அதிகமாக பயணம் செய்யக்கூடிய அந்தப் பேருந்துக்கான கட்டண பணத்தை ரஜினி ரசிகர்கள் செலுத்தினர். இன்று ஒரு நாளைக்கு இலவசமாக அந்தப் பேருந்தை இயக்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று காலை கலவை வரை அனைத்து பயணிகளையும் ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டது. ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு, ஒரு புதிய முயற்சியாக இந்த இலவசப் பேருந்தானது பொது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.
திருப்பூர்
தமிழ்நாடு முழுவதும் ரஜினி காந்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொங்கனகிரி முருகன் கோயிலில் 12 ஜோடிகளுக்கு சர்வ சீர்வரிசையுடன் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி காந்தின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கலந்துகொண்டு மணமக்களுக்கு மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோவிலில் ரசிகர்கள் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு திருச்சி
திருச்சியில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ரவி சங்கர் தலைமையில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரர் கோயிலில் ரசிகர்கள் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் அளித்தனர்.
தங்க மோதிரம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள் சேலம்
சேலம் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 70 கிலோ கிராம் எடையிலான கேக்கை ரசிகர்கள் வெட்டி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று பிறந்த 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றம் சேலம் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்பட 500க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 70ஆவது பிறந்தநாள் - பிரபலங்கள் வாழ்த்து