மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் அதி கனமழை பெய்த நிலையில், தற்போது ஜனவரி முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதி கனமழையால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் மோசமாக இருந்தது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்பிரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கோயிலின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது.