நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சரபோஜி என்பவர் டெக்னீஷயனாகப் பணியாற்றிவருகிறார். அவர் சக தொழிலாளர்களிடம் திருவாரூர் மாவட்டம் கீழகூத்தக்குடி, கூடூர் ஊராட்சியில் போடப்பட்டுள்ள வீட்டு மனைகள் தவணை முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், 1200 சதுரஅடி கொண்ட ஒரு மனைக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 வருடம் செலுத்தவேண்டும், மீதம் ரூ,48 ஆயிரத்தை பத்திரப்பதிவு செய்யும்போது கட்டவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக கும்பகோணம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் நீதிமோகன், பிளாட் போட்டிருப்பதாகக்கூறி பத்திரத்தைக் காட்டியதால் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சரபோஜியிடம் மாதத் தவணை பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.
மூன்று வருடங்கள்வரை மாதாமாதம் பணத்தைப் பெற்றுவந்த சரபோஜி, அதன்பின் பணம் கேட்பதை நிறுத்திவிட்டு, நிலுவை தவணைத் தொகையை பத்திரப்பதிவின்போது மொத்தமாக செலுத்திவிடலாம் என்று கூறியுள்ளார். அதன்பின் நான்கு வருடங்கள் முடிந்தபின் கேட்டபோது வீட்டுமனைக்கான மாதத்தவணையை மனை விற்பனையாளர் நீதிமோகன் என்பவரிடம் கட்டிவிட்டதாகவும், அவரிடம் சென்று கேட்டுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்து விற்பனை செய்வதாக கூறிய இடத்திற்கு சென்றுபார்த்தபோது, அவர்கள் குறிப்பிட்ட எண்ணில் அப்படி ஒரு இடமே இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்பது பேர் மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் ரயில்வே துறை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது