மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து அக்கட்சியின் முதன்மைத் துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்தீர்கள். இதனால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. நடந்ததெல்லாம் ஊழலும் நில அபகரிப்பும்தான்.
இவர்கள் செய்ய முடியாததைச் சொல்லி உங்களைத் திசைத் திருப்புகிறார்கள். உங்கள் கண்களைக் கட்டி இருட்டில் விட்டுவிடுகிறார்கள். நீங்கள் உழைக்கும் வர்க்கம், சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
ஊழலின் மையப்புள்ளி கோபாலபுரம் 2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். எந்த ஊழலை எடுத்துக் கொண்டாலும் அதன் மையப்புள்ளி கோபாலபுரத்தில்தான் இருக்கும். இப்படியெல்லாம் செய்துவிட்டு இப்போது ஏதோ பழைய வீட்டுக்குப் பெயிண்ட் அடித்த மாதிரி வந்து நாங்கள் விடிவுகாலம் தருவோம் என்கிறார்கள்.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்த்த ஒரே தலைவி ஜெயலலிதா. ஆனால் இன்றோ அதிமுகவினர் டெல்லிக்குப் போய் கைக்கட்டி நின்றுவிட்டு வந்து மக்களைத் திசைத் திருப்புகிறார்கள். ஆகவே மாற்றத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!