மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் சங்கரன்பந்தலில் இலுப்பூர்-சங்கரன்பந்தல் விளையாட்டுக் கழகம் சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ஆடவர் - மகளிருக்கான மின்னொளி கபடிப் போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பகல் இரவாகப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.
ரப்பர் மேட்டில் நடைபெற்றுவரும் போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு துறை, நிறுவனங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடிவருகின்றன. லீக் சுற்றுமுறையில் நடைபெறும் போட்டிகளை 25 நடுவர்கள் பங்கேற்று நடத்துகின்றனர்.
நிறைவு நாளான நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்றுவரும் அரையிறுதிப் போட்டிகளைப் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கிவைத்து கண்டு ரசித்தார். ஆடவர் பிரிவில் பெங்களுரூ மாதா அணியும் - சென்னை கபடி அணியும் மோதின.
இதுபோல் மகளிர் பிரிவில் பெங்களூரூ அணியும் - சென்னை சிட்டி போலீஸ் அணியும் மோதின, பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நேற்று மாலையே இறுதிப் போட்டியும் நடைபெறுவதாக இருந்த நிலையில், அதிக பனிப்பொழிவு காரணமாக இன்றைக்கு நடைபெறும் என்று நேற்றே தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'பூமி இழந்திடேல்' புத்தகம் வெளியீடு; வாசகர்கள் வரவேற்பு!