புதுச்சேரி முன்னாள் அமைச்சர் எம்.சி.சிவகுமார் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி பெண் தாதா எழிலரசி கைது செய்யப்பட்டார். புதுச்சேரி பெண் தாதாவாக வலம் வந்த இவர், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி சமூக நல பணிகளில் ஈடுபட்டுவந்தார். இதனைத் தொடர்ந்து, வரவிருக்கிற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தாதா எழிலரசி அடியாட்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, ஏற்கனவே தாதா எழிலரசி மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய நேற்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, காவல் துறையினர் பிரபல பெண் தாதா எழிலரசியை இன்று காலை கைது செய்தனர்.
அதன்பின், காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவ சோதனைக்குப் பிறகு பலத்த காவல் பாதுகாப்போடு புதுச்சேரியில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே, எழிலரசியின் கூட்டாளிகளையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பெண் தாதா எழிலரசி கைது செய்யப்பட்டிருப்பது காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.