மயிலாடுதுறை: வள்ளுவக்குடி கிராமத்தில் திம்மராசு என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நிலத்திற்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் பரிந்துரையின் பேரில், உதவி ஆட்சியர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை வேறொரு கிராமத்திற்குப் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
சுவரொட்டியில் எச்சரிக்கை விடுத்த மக்கள்
இதனை அறிந்த வள்ளுவக்குடி கிராம மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கிராம நிர்வாக அலுவலரின் பணி மாற்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் வள்ளுவக்குடி கிராமத்திலேயே பணி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டினர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) வள்ளுவக்குடி கடைவீதியில் கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், சீர்காழி காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உரிய தீர்வு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இதையும் படிங்க:பணியிடை நீக்கம்: கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை