நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த முடிகண்டநல்லூர் கொள்ளிடம் ஆற்றில், புதிதாக பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குவாரியில் மணல் எடுக்கப்பட்டு, ராதாநல்லூர் என்ற இடத்தில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 15 நாள்களாக மணல் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மணல் சேமிப்புக் கிடங்கு வழங்கப்பட்டுள்ளதால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஒத்துழைப்புடன் முறைகேடாக மணல் அள்ளப்படுவதாகப் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஆற்றில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பல அடி ஆழத்திற்கு நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம், ஆற்றில் மணல் அள்ளப்படுகின்றது. ஆற்றின் குறுக்கே மணலால் பாதை அமைத்து, மணல் அள்ளப்படுகின்றது.
முடிகண்டநல்லூரிலிருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற நகராட்சிகளுக்கும் 200க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இதையடுத்து அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமான அளவில் மணல் அள்ளப்படுவதால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், ஆற்றின் படுகையை உடைத்து மணல் அள்ளியுள்ளதாகவும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி இரவு நேரத்திலும் மணல் அள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய முடிகண்டநல்லூர்பொதுமக்கள், ஊராட்சிமன்றத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மணல் அள்ளுவதை தடுத்துநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்குவாரியைத் தடுத்துநிறுத்திய பொதுமக்கள் மணல் அள்ளுவதைத் தடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், மணல்மேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மணல் குவாரி தொடக்கம் முதல் முடிவு வரை - தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்