மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி தேங்கி நிற்பதால் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மயிலை பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்த சாக்கடை கழிவுநீர்! - பாதாள சாக்கடைத் திட்டம்
மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் மனித கழிவுகளுடன் கலந்து வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும், பேருந்து நிலையம் முன்பு வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் தங்கள் ஆட்டோவை நிறுத்தக்கூட இடம் இல்லாமல் அந்த கழிவின் மீதே ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.