மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு மயிலாடுதுறை: மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தில் 28-வது நாடாளுமன்ற தொகுதி ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற தொகுதியையும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது.
இந்த நாடாளுமன்ற தொகுதி 14 லட்சத்து 84 ஆயிரத்து 348 வாக்காளர்களை கொண்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட ஆசைமணியை தோற்கடித்து திமுக கட்சியை சேர்ந்த செ.ராமலிங்கம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு என தனியாக உறுப்பினர் அலுவலகம் இல்லாததால் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குத்தாலம் சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகள் மறு பரிசீலனை செய்யப்பட்ட போது குத்தாலம் சட்டமன்ற தொகுதி கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் இணைக்கப்பட்டது.
குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அதிலிருந்தே பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு பூட்டியே கிடந்தது. இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற்றப்பட்டது.
இந்த அலுவலகத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மையப் பகுதியில் உள்ள குத்தாலத்தில் வந்து தங்களது புகார் மனுக்களை அளிக்கலாம் என்றும், நான் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து குறைகளை நிவர்த்தி செய்வேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அலுவலகம் திறக்கப்பட்ட சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் அதன் பிறகு தற்போது வரை அலுவலகம் திறக்கப்படாமலே உள்ளது.
பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நிறைவேற்ற வேண்டிய குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றால் மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிடைமருதூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தான் மனு அளிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகா அரசு மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும் டெல்டா மாவட்டத்தின் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து மனு கொடுக்கலாமென்று நினைத்தாலும் உறுப்பினரை எங்கு பார்ப்பது என்றே தெரியாமல் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தேர்தலின் போது ஓட்டு கேட்பதற்காக தொகுதி பக்கம் வந்தார், அதன்பிறகு வெற்றி பெற்றபிறகு நன்றி தெரிவிப்பதற்காக ஒருமுறை தொகுதிபக்கம் வந்தார். அதன்பிறகு எம்பியை அவரது கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் முகநூல் பக்கங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது என்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் கூட இல்லை இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும் என்றும் திமுக நடுநிலையாளர்கள் சிலர் கேட்கின்றனர். அலுவலகம் பூட்டி கிடப்பதால் எதிர்க்கட்சியினர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போட ஆரம்பமாயிட்டாங்க. கிட்டத்தட்ட எம்பியை காணவில்லை என்றும் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியதுதான் எனவும் ஒருபுறம் பேசுகின்றனர்.
வாக்களித்த மயிலாடுதுறை மக்களை எம்பி புறக்கணிப்பதாகவும் எதிர்கட்சியினர் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தனியாக அலுவலர் நியமித்து மனுக்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கத்திடம் கேட்ட போது, பெரிய தொகுதியாக இருப்பதால் அடிக்கடி அலுவலகத்திற்கு வர முடியவில்லை எனவும், கூடிய விரைவில் அலுவலகத்திற்கு மனு வாங்குவதற்காக ஆட்களை நியமிக்க உள்ளதாகவும்” தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகம் மட்டுமல்ல.. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது..! முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!