ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு அவசியமில்லை என்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் கூறிய மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்க அதை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், காவல் துறையினரின் தடையை மீறி கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
கண்ணாரத் தெருவிலிருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியே தாலுகா அலுவலகம் வரையில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கோஷங்களை எழுப்பினர்.