மயிலாடுதுறை:கரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம், கடற்கரையில் தர்ப்பணம் செய்ய அரசு தடைவிதித்துள்ளது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாத அமாவாசை முன்னோர் பூமிக்கு வரும் நாளாக இந்துக்களால் கருதப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மகாளய அமாவாசை நாளன்று பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் மூதாதையருக்கு திதி செலுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகைதருவார்கள்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இதனால் மக்கள் பெருமளவு கூடுவர் என்பதாலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான தகுந்த இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதாலும் பொதுமக்கள் கூடுவதற்குத் தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளார்.