திருவாரூர் மாவட்ட எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து தனசேகர் என்பவரின் நிலம் பாதிப்படைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "நேற்றிரவு (செப்.22) சிறூவாரூர் எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து தனசேகரன் என்பவரது நிலம் முழுவதும் எண்ணெய் காடாக மாறியுள்ளது. இவ்வாறு ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயல்கள் வீணாவது புது செய்தி அல்ல. இதேபோன்று 2018ஆம் ஆண்டில் தனசேகருடைய வயலில் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் நிலம் பாழானது.
எண்ணெய் கசிவால் பாழான நிலத்தை சரிசெய்ய தனது நிலத்தில் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு தருவதாக கூறியுள்ளது. எண்ணை கசிவுகளை பூமிக்கு மேல்தான் சுத்தம் செய்ய முடியும், பூமிக்கடியில் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்கமுடியாது.
2018ஆம் ஆண்டில் பாண்டவையாற்றின் குறுக்கே செல்லும் குழாய் உடைப்பால் ஆறுகளில் கச்சா எண்ணை கலந்தது. இதனால், தண்ணீரை குடித்த கால்நடைகள் நோயுற்று இறந்தது. கொராடாச்சேரி, கோட்டூர், குடவாசலில் மட்டும் 100 கிணறுகளை ஒஎன்ஜிசி அமைத்துள்ளது.