மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் தனியார் மெட்ரிக் பள்ளியில், தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்கக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலர் குடியரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலர் குடியரசு, "இந்தச் சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 8,000 பள்ளிகள் உள்ளன. கரோனா தாக்கத்தால் 12 மாதங்களாக பள்ளிகள் மூடியிருப்பதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறோம். மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கருணைத் தொகையாக மாதம் 2,000 ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை. தனியார் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு சுயநிதி பள்ளிகளுக்கு மட்டும் விலையில்லா லேப்-டாப் தருவதாக அரசு அறிவித்துள்ளது பாரபட்சமான செயல்.
'அரசுப் பள்ளிகளுக்கு இணையாக சலுகை வழங்காவிடின் தேர்தலைப் புறக்கணிப்போம்' சமீபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளைப் போல தனியார் பள்ளிகளுக்கும் சமமான சலுகை வழங்கினால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெறுவோம். அரசுப் பள்ளிகளுக்கு சமமான சலுகைகளை வழங்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு. இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.