மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருக்கடையூருக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருக்கடையூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை கோபூஜை, கஜபூஜை செய்து கோயில் உள்ளே சென்று கள்ள வாரண பிள்ளையார் மற்றும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்காரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளில் வழிபாடு நடத்தி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி நட்டா மற்றும் நாட்டு மக்கள் ஆகியோர் பெயர் மற்றும் ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தார். இதன் பின்பு மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை கொட்டும் மழையில் நனைந்து கொண்டு பேசியதாவது, “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோலை, நேரு கைத்தடி என்ற பெயரில் பயண்படுத்தி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
தற்போது புதிய நாடாளுமன்றத்தில் அதே செங்கோலை, திருவாசகம் கோளறு பதிகம் தேவாரத்தோடு பாரத பிரதமர் நாடாளுமன்றத்தில் நிறுவி மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
டெல்டா காரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது, திமுக அரசு வழங்குவதில்லை. மேலும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டி தருவதாக கூறிய தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டி தரவில்லை.