பல்லி விழுந்த வடையை சாப்பிட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதி மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் இன்று (ஜூலை 08) தனது 8 மாத கர்ப்பிணி மகள் செல்வ லெட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக இன்று காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது தனது மகள் சாப்பிட வேண்டும் என்று கூறியதால் பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள தனியார் சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது மகள் செல்வ லெட்சுமி பொங்கல் மற்றும் உளுந்துவடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வடை சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகிய நிலையில் இருந்ததைக் கண்ட அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்துக் கடை நிர்வாகத்தினரிடம் கூறவே உடனடியாக விரைந்து சென்ற கடை நிர்வாகத்தினர், வடையில் கருவேப்பிலை கிடந்திருக்கும் என கூறி இலையில் இருந்த வடையைப் பிடுங்கித் தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தந்தையும், மகளும் கடை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வடையை சாப்பிட்ட கர்ப்பிணிக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தந்தை செல்வம், மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி நலமுடன் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறையினரிடம் செல்வம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சமையலறை பகுதி தூய்மையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் சமையல் பொருள்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்றும் கூறினார். உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு பதில் அளிக்க உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ஓரிரு நாள்களுக்குள் குறைபாடுகளைச் சரிசெய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.
இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் இயங்கி வரும் உயர்தர சைவ உணவகத்தில் கரப்பான் பூச்சி கிடந்தது. தற்போது வடையில் பல்லி வெந்து கிடப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? டோனியா.. கோலியா.. இல்ல சச்சினா..? யார் தெரியுமா?