புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று (ஜன.9) நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பரப்புரை பேரணி நடத்தினர். தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் பேரணி தொடங்கியது.
இந்தப் பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலுக்கு வந்தடையும்போது, விவசாயிகள் மத்தியில் பேசிய பிஆர் பாண்டியன், 'புதிய வேளாண் சட்டத்தை பாராளுமன்றத்தில் கூட்டி விவாதித்து ரத்து செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை வலியுறுத்த வேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்பார்கள்’ என்றார்.