தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூடும் நிலையில் அம்மா உணவகம் - நகராட்சி நிர்வாகம் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் அம்மா உணவகம் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், பொதுமக்களுக்கு சரிவர உணவு வழங்க முடியவில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக இதனை சரிசெய்யாவிட்டால் அம்மா உணவகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

Amma Unavagam
அம்மா உணவகம்

By

Published : Aug 11, 2023, 11:59 AM IST

மூடும் நிலையில் அம்மா உணவகம் - நகராட்சி நிர்வாகம் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் திமுகவைச் சேர்ந்தவர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் தலைவராக வந்ததால் நகராட்சியில் பல்வேறு மேம்பாடுகள் நடக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆணையர் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வந்ததாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பணிகளும் நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நடைபெறும் நிலை உள்ளதால், எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு விளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், துப்புரவு பணிகள் முறையாக நடக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், சீர்காழி நகராட்சியில் உள்ள அம்மா உணவகம் முறையான பராமரிப்பின்றி இருப்பதால், பொதுமக்களுக்கு சரிவர உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அம்மா உணவகத்தை மூடிவிட்டு சாவியை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, "சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 500 முதல் 600 பேர் உணவு உண்கின்றனர். இங்கு காலை இட்லியும், மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக காலை உணவான இட்லி தயார் செய்ய மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதானதால் இட்லி தயார் செய்ய முடியவில்லை. இதனால், காலை உணவுக்காக அம்மா உணவகத்தை தேடிவரும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றத்துடன் பசியுடன் திரும்பி செல்கின்றனர். இது போன்று மதியம் உணவு சமைக்க அடுப்புகள் பழுதானதால் ஒரே ஒரு அடுப்பை மட்டும் வைத்து, போதுமான அளவு உணவு தயார் செய்யமுடியாத நிலையில், மதிய உணவும் சரிவர வழங்க முடியவில்லை. அதுமட்டுமின்றி சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் சிலிண்டரின் இணைப்பு பகுதி பழுதடைந்து, அதனையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் பழுதுபட்டு பயன்படாமல் உள்ளது" என்றனர்.

மேலும், ஏழை எளிய மக்களின் பசியை போக்கி வரும் அம்மா உணவகத்தை கட்சி பாகுபாடு இன்றி முறையாக நடத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: நிலத்தை அபகரிக்க கூலிப்படை ஏவிய எஸ்ஐ: மோதலில் கண்ணை பறிகொடுத்த நபர்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details