மயிலாடுதுறை:சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஆய்வகம், வகுப்புகளில் உள்ள இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர கோரி கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல் கல்லூரி பேராசிரியர்கள் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று (பிப்.15) மாலை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உள்ளிட்டோர் கல்லூரியில் ஆய்வு செய்தனர்.
அது மட்டுமில்லாமல், கல்லூரி பேராசிரியர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பேராசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துச் சென்றனர். மேலும் அப்போதே மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் 10 முதல் 15 நாட்களுக்குள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மாணவர்கள் யாரும் இல்லாததால், இன்று (பிப்.16) காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து மீண்டும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.