மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கல்லூரி இயங்கி வருகிறது. சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரியில் குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி முதல்வர் அறிவொளியை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை புதுப்பிக்காதால் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் பெற்ற பட்டம் செல்லாது என்ற சூழல் நிலவி வருவதாகவும் எனவே தன்னாட்சி அதிகாரத்தை புதுப்பிக்க தவறிய கல்லூரி முதல்வரை நீக்க வலியுறுத்தியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், இந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணி மேம்பாடு வழங்காததால் கல்லூரி முதல்வரை கண்டித்து பேராசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து செவ்வாய்கிழமை இரண்டாவது நாளாக கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு வருகை புரிந்தனர்.
பூம்புகார் கல்லூரி விடுமுறை இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து பூம்புகார் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் போராட்டத்தால் கல்லூரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இன்று (15.02.2023 -17.02.2023) முதல் மூன்று நாட்களுக்கு வகுப்புகளை ரத்து செய்து கல்லூரி முதல்வர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.