தமிழ்நாடுஅரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில், 2 கிலோ அரிசி,1 கிலோ பருப்பு,1 கிலோ வெல்லம்,100 கிராம் நெய், முந்திரி, ஏலக்காய், உலர்ந்த திராட்சை தலா 25 கிராம் போன்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து நாகப்பட்டினம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், ஜனவரி 10ஆம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 240 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு பெட்டகம்: தொழிலாளர்களிடம் 50 ரூபாய் கட்டாய வசூல்!
நாகப்பட்டினம்: கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இடைத்தரகர்கள் மூலம் டோக்கன் விநியோகம் செய்து கட்டாய வசூல் நடப்பதையடுத்து, கட்டுமான தொழிலாளர்கள் இடைத்தரகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும் கட்டுமான தொழிலாளர்களை அலுவலக ஊழியர்கள், அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கடைகளில் டோக்கன் பெற்று வருமாறு அனுப்பி வைக்கின்றனர். அங்கு தலா 50 ரூபாய் கட்டாய வசூலுக்கு பின் கடை ஊழியர்களால் அதிமுக தொழிற் சங்க நிர்வாகியின் பெயர் அச்சிட்ட டோக்கன் வழங்கப்படுகிறது.
இடைத்தரகர்களிடம் டோக்கன் பெறாமல் செல்லும் கட்டுமான தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் திரண்ட கட்டுமான தொழிலாளர்கள், கட்டாய வசூல் நடத்தும் இடைத்தரகர்களிடம் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.