தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கவும், கட்சிக் கொடிகளை அகற்றவும், எம்எல்ஏ அலுவலகங்களை மூடி சீல்வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை தேர்தல் அலுவலர்கள் தேர்தலை முன்னிட்டு பணி மாறுதல் செய்யப்பட்ட உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அலுவலர்கள் இன்னும் பணியில் சேரவில்லை. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து நான்கு நாட்கள் ஆகியும் மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
குறிப்பாக பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பாலக்கரை என பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விதி மீறல்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் எனவும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.